'இந்தியா ' கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவம் : ஜி.கே.வாசன்

தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
'இந்தியா ' கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவம் : ஜி.கே.வாசன்
Published on

ஈரோடு,

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி ஈரோடு வேளாளர் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பேசினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஆண்டுக்கு 3 மாதம் மட்டுமே கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு 10 மாதங்களாக உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும். பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன், செல்போன் பயன்படுத்துவதும் குறையும்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது. அங்கு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்க முறைப்படுத்த வேண்டும். மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். விரைவில் பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என்று தீர்மானிக்கப்படும். தி.மு.க. கூட்டணியை வெல்லும் வலிமை படைத்த கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும்.

இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. அதில் உள்ள தலைவர்கள் உதட்டளவில் தான் பேசி வருகின்றனர். அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றன.

இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com