சவுதி அரேபியா பாலைவனத்தில் ஒட்டகம், ஆடு மேய்த்து சித்ரவதைக்கு ஆளான தமிழர்: கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு

கவாஸ்கர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு சவுதிஅரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.
சவுதி அரேபியா பாலைவனத்தில் ஒட்டகம், ஆடு மேய்த்து சித்ரவதைக்கு ஆளான தமிழர்: கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு
Published on

திருச்சி,

நாகப்பட்டினம் மாவட்டம் பெரியதும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 45). இவருடைய மனைவி உதயஜோதி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கவாஸ்கர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் சவுதிஅரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.

அங்கு சென்றதும் அவரை பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அந்த பணியை செய்ய மறுத்ததால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவித்து வந்த கவாஸ்கர், செல்போன் மூலம் தனது மனைவியிடம் இதுபற்றி கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து அவரது மனைவி உதயஜோதி நாகப்பட்டினத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார். அவர்கள், அரபுநாட்டில் உள்ள செந்தமிழர் பாசறை அமைப்பு மூலம் அவரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். சட்டரீதியாக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட ஒட்டகப்பண்ணை உரிமையாளரிடம் விசா கட்டணம் ரூ.1 லட்சம் கொடுத்து கவாஸ்கரை மீட்டனர். இதையடுத்து கவாஸ்கர் சவுதியில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவருடைய மனைவி உதயஜோதி மற்றும் மகள், மகன் ஆகியோர் கவாஸ்கரை கண்ணீர் மல்க வரவேற்றனர். குடும்பத்தினரை கண்ட அவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர்.

சவுதிஅரேபியாவில் இருந்து மீட்கப்பட்ட கவாஸ்கர் கூறும்போது, "சவுதியில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் புறப்பட்டு சுமார் 3 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அங்குதான் ஒட்டகம், ஆடுகளை மேய்க்க வேண்டும். பின்னர் அவற்றுக்கு தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.

வேலையை செய்ய மறுத்தால் அங்கிருந்த 2 பெண்கள் என்னை அடித்து துன்புறுத்துவார்கள். நான் செல்போன் பேசுவதைகூட அங்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தான் பேசுவேன். அப்படி பேசித்தான் அங்குள்ள எனது நிலைமையை குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். ஒருகட்டத்தில் எனது சிம் கார்டையும் பறித்துக்கொண்டனர்.

இதற்கிடையே என்னை அனுப்பி வைத்த டிராவல்ஸ்காரரிடம் போன் செய்து கேட்டபோது, என்னிடமும் வீட்டு வேலை என்று தான் கூறினார்கள். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். தற்போது என்னை பல போராட்டங்களுக்கு பிறகு அங்கிருந்து மீட்டு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com