

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கேரள மாநில கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை சென்னை வர உள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான பணிகளை கவர்னர் மேற்கொள்ள உள்ளார்
அதே சமயம், தமிழகத்தில் த.வெ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகளை அக்கட்சி பெறவில்லை. இந்த சூழலில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொறுப்பு கவர்னர் அர்லேகர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.