

சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டு பேசியதாவது:-
நல வாரியம்
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், நலவாரிய உதவிதொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.3 லட்ச குடும்ப உதவி நிதி இனி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
விருது
இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேசன், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
சமூக ஊடக பிரிவு
அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக ஊடக பிரிவு என்ற தனி பிரிவு உருவாக்கப்படும். அரசின் விளம்பரங்களுக்கு மின் சுவர்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.