

சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17-வது பேரவைக்கான கூட்டத்தொடர் 28 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மொத்தம் 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், முதல்-அமைச்சரின் 17 முக்கிய அறிவிப்புகள் உள்பட 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும், 9 அரசினர் தனித் தீர்மானங்கள் மற்றும் 13 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் நலன், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய விவாதங்களும் நடைபெற்றன.
ஜனநாயக மாண்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதல்-அமைச்சர் 17 அறிக்கைகளையும், 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளையும் வெளியிட்டதோடு, 13 சட்ட முன்வடிவுகளும், 9 அரசினர் தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
17-வது பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 11-5-2026 முதல் 13-5-2026 வரை மற்றும் 18-6-2026 முதல் 23-6-2026 வரையும், இரண்டாம் கூட்டம் 5-8-2026 முதல் 8-9-2026 வரையும் நடைபெற்றது. இக்கூட்டத்தொடர், மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள், ஆக்கப்பூர்வமான விவாதங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க தனி் தீர்மானங்கள் மற்றும் ஜனநாயக மரபுகளை பேணிய அவை நடவடிக்கைகள் என பல்வேறு சிறப்புகளுடன் நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தொடரில் பேரவை மொத்தம் 28 நாட்கள், 178 மணி நேரம் 31 நிமிடங்கள் கூடியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், தொகுதி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் மக்கள் நல பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதல்-அமைச்சர் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் மொத்தம் 18 அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அவற்றில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் மட்டும் மக்கள் நலன், விவசாயிகள் நலன், சமூகப் பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, போக்குவரத்து, விளையாட்டு மற்றும் நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 17 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு:
நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்பு.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கும் அறிவிப்பு.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் பால் கொள்முதல் விலையை உயர்த்தும் அறிவிப்பு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் மக்கள் நல அறிவிப்புகள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் அறிவிப்பு.
“வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் அறிவிப்பு.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிடும் என்ற அறிவிப்பு.
“வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக “வெற்றிப் பயணம்” திட்டத்தைச் செயல்படுத்தும் அறிவிப்பு.
பால் உற்பத்தியாளர்கள் மேலும் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தும் அறிவிப்பு.
எரிசக்தித் துறையின் சார்பில் புதிய மின்கட்டமைப்புகளை அமைக்கும் அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கும் அறிவிப்பு.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு அறிவிப்புகள்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றைப் பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறையைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் அறிவிப்பு.
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு.
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கும் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைக்கும் அறிவிப்பு.
சென்னையில் நவீன வசதிகளுடன் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகத்தை அமைக்கும் அறிவிப்பு.
விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சியையும் மையமாக கொண்டதாக இந்த அறிவிப்புகள் அமைந்தன.
வரலாற்றுச் சிறப்புமிக்க தனி தீர்மானங்கள்
தமிழ்நாட்டின் நலன், உரிமைகள், மொழி மற்றும் பிரதிநிதித்துவம் சார்ந்த முக்கியப் பிரச்சனைகளில் மாநிலத்தின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் 9 அரசினர் தனித் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் குறிப்பிடத்தக்க தீர்மானங்கள்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம்.
நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்; மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்; வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலனை பெண்கள் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்.
தமிழை சென்னை ஐகோர்ட்டு முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தமிழில் வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7-ன் கீழ் மாநில கவர்னரால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்.
இத்தீர்மானங்கள் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, விவாதங்களுக்குப் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள்
2026–2027ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது, 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் வெளியிடப்பட்டன.
கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, சமூகநலன், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர், போக்குவரத்து, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அறிவிக்கப்பட்டன.
புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரிவுபடுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு துறைவாரியான அறிவிப்புகள் இடம்பெற்றன.
கேள்வி நேரத்தில் விரைவான, தெளிவான மற்றும் உறுதியான பதில்கள்
சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 14,399 வினாக்கள் வரப்பெற்றன. அவற்றில் 12,733 வினாக்கள் அனுமதிக்கப்பட்டன. இவ்வினாக்களை 170 உறுப்பினர்கள் அளித்திருந்தனர். அனுமதிக்கப்பட்ட வினாக்களில் 3,455 உடுக்குறியிட்ட வினாக்களும், 9,272 உடுக்குறியிடாத வினாக்களும், 6 குறுகிய கால வினாக்களும் இடம்பெற்றன.
கேள்வி நேரத்தின்போது அவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட 23 வினாக்கள் மற்றும் 242 துணை வினாக்களுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடனுக்குடன், விரைவாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய முதன்மை வினாக்கள் மட்டுமின்றி, அவற்றை தொடர்ந்து எழுப்பப்பட்ட துணை வினாக்களுக்கும் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்து விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.
தொகுதிகளின் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், கேள்வி நேரத்திலேயே பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
சிறப்புக் கவன ஈர்ப்புகளுக்கு முக்கியத்துவம்
அவசரத்தன்மை வாய்ந்த மிக முக்கியப் பொருண்மைகள் தொடர்பாக 45 சிறப்பு கவன ஈர்ப்புகள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 106 உறுப்பினர்கள் உரையாற்றினர். இதற்காக மொத்தம் 6 மணி நேரம் 48 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.
மேலும், உறுப்பினர்களிடமிருந்து 929 கவன ஈர்ப்புகள் வரப்பெற்று, அவற்றில் 153 கவன ஈர்ப்புகள் அனுமதிக்கப்பட்டன. 7 கவன ஈர்ப்புகளுக்கு அவையில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், கவன ஈர்ப்புகளில் 10 உறுப்பினர்கள் உரையாற்றினர். 45 பொருண்மைகள் சிறப்புக் கவன ஈர்ப்புகளாகவும், 59 பொருண்மைகள் தகவல் கோரலாகவும் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அரசினர் சட்ட முன்வடிவுகள் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றின் மீது உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டன. விரிவான விவாதங்களுக்கு பின்னர், நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துதல், மக்கள் நலனை உறுதிப்படுத்துதல் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட 13 அரசினர் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர் நேரலை – புதிய சாதனை
17-வது சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
கேள்வி நேரம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள், உறுப்பினர்களின் உரைகள், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களின் பதில்கள், முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்தியது.
2026 ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் தொடர்பான பதிவுகள் மட்டும் 10,92,182 பார்வைகளைப் பெற்றுள்ளன. சட்டப்பேரவை நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தி, பேரவையின் செயல்பாடுகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்த்த புதிய சாதனையாக இந்தத் தொடர் நேரலை அமைந்தது.
பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றபோதிலும், உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை அவையில் முழுமையாக பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேரவையின் மாண்பையும் ஜனநாயக மரபுகளையும் பேணும் வகையில் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு
இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு அதிக நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. கேள்வி நேரம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் முக்கியத் தீர்மானங்கள் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முழுமையாக பதிவு செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 17 மணி நேரம் 43 நிமிடங்களும், திமுக உறுப்பினர்கள் 31 மணி நேரம் 21 நிமிடங்களும், அதிமுக உறுப்பினர்கள் 17 மணி நேரம் 45 நிமிடங்களும், இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 20 மணி நேரம் 24 நிமிடங்களும் உரையாற்றியுள்ளனர். சட்டப்பேரவை விவாதங்களில் அனைத்து தரப்பு உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய இடமளிக்கப்பட்டு, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
தொகுதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் நிலவும் குடிநீர், சாலை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் தேவைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட தொகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதன்மூலம் மாநில அளவிலான முக்கியப் பிரச்சனைகளுடன், ஒவ்வொரு தொகுதியின் தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளும் சட்டப்பேரவையில் உரிய கவனம் பெற்றன.
மக்கள் நலன் சார்ந்த விரிவான விவாதங்கள்
கூட்டத்தொடர் முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, தொழில் வளர்ச்சி, சமூகநலன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருண்மைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கமளித்து, அரசின் நிலைப்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தனர். 28 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு கட்சியினரின் மோசமான நடவடிக்கையால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மற்ற நாட்களில் கடும் அமளி செய்தபோதும் அவர்களை சட்டமன்றப்பேரவை தலைவர் வெளியேற்றவில்லை.
விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்புகள், வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானங்கள், 51 துறைகளின் சார்பில் வெளியிடப்பட்ட 1,117 அறிவிப்புகள், கேள்வி நேரத்தில் அமைச்சர்களின் விரைவான மற்றும் உறுதியான பதில்கள், 13 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றம், பேரவை நடவடிக்கைகளின் தொடர் நேரலை, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய சிறப்புமிக்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடராக இது அமைந்தது.