தமிழக சட்டசபை கூடியது: 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி


தமிழக சட்டசபை கூடியது: 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 20 Jan 2026 9:51 AM IST (Updated: 20 Jan 2026 9:52 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றனர்.

சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். அங்கு நின்றபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் மு.அப்பாவுவும், இடது புறம் போடப்பட்டிருந்த இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமாரும் அமர்ந்தனர்.

சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, கவர்னர் உரை நேரலையாக வழங்கப்படும். ஆனால், இன்று நேரலை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி, 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை.

2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்த நிலையில், இந்த ஆண்டும் அவர் உரையை புறக்கணித்து வெளியேறி இருக்கிறார்.

1 More update

Next Story