

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு 2026 ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின. இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்ததை காணமுடிந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தலில் களம் கண்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முடிவில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடத்தைப் பிடித்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சுமார் 50 ஆண்டு காலமாக தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த அ.தி.மு.க. முதல்முறையாக தனது "முக்கிய எதிர்க்கட்சி" என்ற அந்தஸ்தை இழந்து 3-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 1972-ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. 1977-ல் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தது. அன்று முதல் 2021 வரை, அ.தி.மு.க. ஆட்சியில் இல்லையென்றால் “பிரதான எதிர்க்கட்சி" என்ற இடத்திலாவது அமர்ந்திருந்தது.
அ.தி.மு.க.வின் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், அதன் பலம் எத்தகையது என்பது புரியும். எம்.ஜி.ஆர் காலத்தில் அதாவது, 1977, 1980, 1984 எனத் தொடர்ந்து 3 முறை ஆட்சியைப் பிடித்து அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. அதே போல ஜெயலலிதா 1991, 2001, 2011 மற்றும் 2016 என 4 முறை அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார். குறிப்பாக 2016-ல் "தனித்துப்போட்டி” என்ற வியூகத்தில் 134 இடங்களை வென்று சரித்திரம் படைத்தார்.
2021-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழந்த போதிலும் அ.தி.மு.க. தனித்து 66 இடங்களை வென்று ஒரு வலுவான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. அதற்கு முன்பு மிகப்பெரிய தோல்வியாக 1996-ல் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் அப்போது அது 'இருமுனைப் போட்டி'. எனவே வாக்கு சதவீதம் 21 என்றாலும், 2-வது பெரிய சக்தியாகவே இருந்தது. ஆனால் 2026-ல் அதே 22 வாக்கு சதவீதத்தைப் பெற்றும், மும்முனைப் போட்டியால் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, அ.தி.மு.க-வின் பாரம்பரிய வாக்கு வங்கியான இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., த.வெ.க. மற்றும் அ.தி.மு.க. என மும்முனைப் போட்டி நிலவியதால் அ.தி.மு.க.வின் கோட்டைகளாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் கூட அந்த கட்சி சரிந்து இருக்கிறது. த.வெ.க.வின் வருகையால் "வாக்குகள் பிரிப்பு” என்ற காரணத்தால் அ.தி.மு.க.வின் கிராமப்புற மற்றும் பெண்கள் வாக்கு வங்கியை நேரடியாகப் பாதித்துள்ளது.