தமிழக சட்டசபை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. வைத்த 'செக்'


தமிழக சட்டசபை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. வைத்த செக்
x

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக 50 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு வற்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, வரும் தேர்தலிலும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 50 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு வற்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 4-ந் தேதி 2 நாள் பயணமாக புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தந்தபோது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கவில்லை. மாறாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 முறை சந்தித்தார்.

அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா, பாஜகவுக்கு இந்த முறை 50 தொகுதிகள் வேண்டும் என்றும், அதுவும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளே வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணியிடம் பட்டியல் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மத்திய மந்திரி அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், கடந்த 7-ந் தேதி காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி சந்தித்து கூட்டணியில் இடம்பெறுவதை உறுதி செய்தார்.

இந்த நிலையில், அன்று மாலையே திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதாவது, தமிழகம் வரும்போது அமித்ஷாவை சந்திக்காமல், அடுத்த 2 நாளில் டெல்லி சென்று சந்திப்பது ஏன்? என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, அவரிடம் அமித்ஷா கறாராக பேசியதாக சொல்லப்படுகிறது. பாஜகவுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என்றும், எந்த தொகுதிகள் என்பதை நாங்களே முடிவு செய்துள்ளோம் என்றும், நீங்கள் எங்களுக்கு ஒதுக்கும் பலம் இல்லாத தொகுதிகள் வேண்டாம் என்றும் கூறிவிட்டு அவரிடமும் 50 தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அதிமுகவுக்கு பாஜக 'செக்' வைத்ததாகவே தெரிகிறது. பாஜக கேட்கும் 50 தொகுதிகளில் தற்போது திமுக வசம் 30 தொகுதிகளும், அதிமுக கையில் 5 தொகுதிகளும், காங்கிரஸ் பிடியில் 6 தொகுதிகளும், பாஜகவிடம் 4 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தலா 1 தொகுதிகளும் உள்ளன.

அதிமுகவிடம் பாஜக கேட்பதாக கூறப்படும் 50 தொகுதிகள் பட்டியல்:-

திருத்தணி, காஞ்சீபுரம், கோவை (தெற்கு), ஆவடி, தளி, சிங்காநல்லூர், அம்பத்தூர், திருவண்ணாமலை, பழனி, துறைமுகம், திருக்கோயிலூர், அரவக்குறிச்சி, ஆயிரம் விளக்கு, ஈரோடு (கிழக்கு), ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், மொடக்குறிச்சி, திருச்சி (கிழக்கு), விருதுநகர், தாராபுரம், திட்டக்குடி, தாம்பரம், திருப்போரூர், உத்திரமேரூர், உதகமண்டலம், விருத்தாசலம், திருப்பூர் (வடக்கு), சிதம்பரம், திருப்பூர் (தெற்கு), மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், திருவையாறு, திருச்சுழி, திருமயம், ராமநாதபுரம், காரைக்குடி, திருச்செந்தூர், சிவகங்கை, மதுரை (வடக்கு), கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை (மத்தி), நாகர்கோவில், திருப்பரங்குன்றம், குளச்சல், ராஜபாளையம், விளவங்கோடு.

1 More update

Next Story