

சென்னை,
தமிழக தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். அனல் பறக்கும் பிரசாரம் ஒரு புறம் நடக்கும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது வரை 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தேர்தல் கமிஷன் வசம் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 3 ஆயிரத்து 22 இடங்களில் உள்ள 5 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் முழுமையாக சி.சி.டி.வி. கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது. அங்கு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள், நுண்பார் வையாளர்கள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்றுள்ளார். தேர்தல் ஏற்பாடுகள், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.