தமிழக சட்டசபை தேர்தல்: காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணிக்கை- அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்: காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணிக்கை- அதிகாரிகள் விளக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின. இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்ததை காணமுடிந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். பிரசாரம், ரோடுஷோ என பரபரப்பான காட்சிகளுடன் இந்த தேர்தல் திருவிழா அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்கு எண்ணிக்கை:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்ததைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. இதன் முடிவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

62 மையங்கள்:

தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 பேர் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுதவிர 5 லட்சத்து 80 ஆயிரத்து 384 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 62 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும்.

தேர்தல் முடிவு எப்போது?

பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில தேர்தல்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவு ஓரளவு பிற்பகல் 3 மணியளவில் தெரியவாய்ப்புள்ளது.

காலை 8 மணிக்கு தாபல் வாக்குகள்:

இன்று காலையில் 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இந்த நிலையில் தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம் என்பது குறித்து தேர்தல் கமிஷன் அளித்துள்ள விளக்கம் குறத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறியதாவது:

இன்று முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண் பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு கணினி பதிவாளர் என்று மொத்தம் 4 பணியாளர்கள் இருப்பார்கள். தபால் வாக்குகளை பொறுத்தவரையில் 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டுள்ளது. முதலில் ஒரு சட்டசபை தொகுதியில் வரப்பெற்ற மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகாத வாக்குகள் என்று தனியாக பிரிக்கப்படும்.

தபால் வாக்கு சீட்டில் ஒரு வேட்பாளருக்கான பகுதியில் 'டிக்' செய்து இருந்தால், 'சீல்' வைத்து இருந்தால். வேட்பாளரின் பெயரை எழுதி இருந்தால் அந்த தபால் வாக்கு செல்லும். தபால் வாக்கு நிராகரிப்பை பொறுத்தவரையில் தபால் வாக்கு படிவத்தில் உரிய அலுவலரின் கையெழுத்து மற்றும் முத்திரை இல்லாவிட்டால் அந்த தபால் வாக்கு செல்லாது. 2 வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் 'டிக்' செய்து இருந்தாலும் அந்த வாக்கு செல்லாது. இறுதியாக செல்லும் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். செல்லும் தபால் வாக்குகள் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு முகவர்களிடம் காண்பிக்கப்பட்டு, அந்த வேட்பாளர்களுக்கான சிறிய பெட்டியில் போடப்படும். இறுதியாக தபால் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கடைசி சுற்றுக்கு முன்னதாக தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com