ஏப்ரல் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
ஏப்ரல் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்
Published on

சென்னை,

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதி நிறைவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதியானது இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் (மார்ச்) தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டன. அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டவர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவில் சிக்கியவர்களை தவிர்த்து, முகவரி மாறியவர்கள் அதற்கான ஆதாரத்துடன் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கான அவகாசமும் இன்று நிறைவடைந்துள்ளது. சுமார் 20 லட்சம் பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களே தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

தமிழகத்தில் தேர்தல் எப்போது?

இது தேர்தலுக்கான ஏற்பாட்டில் ஒரு பகுதி என்றாலும், மற்றொரு பக்கம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கிடையே, நாளை (புதன்கிழமை) துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு சென்னை வர இருக்கிறார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் ஆய்வு செய்வார் என்று தெரிகிறது.

5 மாநில சட்டசபை தேர்தலை பல்வேறு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 2-வது கட்ட தேர்தலின்போது தமிழகத்திலும் வாக்குப்பதிவு நடைபெறும் என டெல்லியில் இருந்து வரும் தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஏப்ரல் 2-வது வாரத்தில், குறிப்பாக ஏப்ரல் 13-ந் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com