

சென்னை,
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜூன் 15) மாநில சட்டசபைகளின் பதவிக் காலமும் நிறைவடைகிறது.
அதற்கு முன்னதாக தமிழகம் உள்ளிட்ட இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் வரும் 23-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அடுத்த மாதம் (மார்ச்) 2-வது வாரம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 10-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம், மேற்கு வங்காளத்தில் பல கட்டங்களாகவும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் மாத மத்தியில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் 13-ந் தேதி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், அதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு வருவதால், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களை கருத்தில் கொண்டு, இந்த தேதியிலும் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.