

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2026 ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்றது. தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின. இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தலில் களம் கண்டனர்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிவில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடத்தைப் பிடித்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தனித்தொகுதிகள் 46:
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 44 பட்டியல் சமூகத்தினர் (S.C.) மற்றும் 2 பட்டியல் பழங்குடியினர் (S.T.) என மொத்தம் 46 சட்டமன்ற தொகுதிகளில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய வகையில் தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன.
த.வெ.க. 23-ல் வெற்றி:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 46 தனித்தொகுதிகளில் பொன்னேரி, பூந்தமல்லி, திரு.வி.க.நகர், எழும்பூர், ஸ்ரீபெரும்புதூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, ராசிபுரம், சேந்தமங்கலம், அவினாசி, துறையூர், பெரம்பலூர், கந்தர்வக்கோட்டை, கிருஷ்ணராயபுரம், நிலக்கோட்டை, ஊத்தங்கரை, பெரியகுளம், சோழவந்தான், மானாமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர். ஓட்டப்பிடாரம் ஆகிய 23 தனித்தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் வந்தவாசி, திட்டக்குடி, வானூர், வால்பாறை, கூடலூர், திருவிடைமருதூர், சீர்காழி, பரமக்குடி, விளாத்திகுளம், வாசுதேவநல்லூர் ஆகிய 10 தனி தொகுதிகளையும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செய்யூர், மதுராந்தகம், செங்கம், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, அரூர், தாராபுரம், சங்கரன்கோவில் ஆகிய 9 தனி தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோவில், திண்டிவனம் ஆகிய 2 தனித்தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கீழ்வேளூர் தனி தொகுதியையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருத்துறைப்பூண்டி தனி தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.