தமிழக சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.

அனைத்து அலுவல்களும் முடிந்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் பிப்ரவரி 14-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்ததால், மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழக சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30-ந் தேதி பிறப்பித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. முதல் நாள் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரும் ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் அவை கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com