முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் ஆகிறது தமிழகம்..!

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் ஆகிறது தமிழகம்..!
Published on

சென்னை,

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 38 மாவட்டங்களிலும் 2022-23-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டில் தமிழகத்தில் 15 லட்சத்து 309 எழுதப்படிக்க தெரியாதோருக்கு எழுத்தறிவு வழங்கிட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

அதன்படி, எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுத்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை தாண்டி கூடுதலாக 733 பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் பொருட்டு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 38 மாவட்டங்களிலும் 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) மத்திய கல்வி அமைச்சக திட்ட ஒப்புதல் குழுவின் அறிக்கையின்படி 15 லட்சத்து 309 எழுதப் படிக்கத் தெரியாதோர் எண்ணிக்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து முதற்கட்டமாக 5 லட்சத்து 37 ஆயிரத்து 869 கற்போர் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 கற்போர் கண்டறியப்பட்டு, அவர்கள் 39 ஆயிரத்து 250 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.14) அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15 ஆயிரத்து 309 கற்போரை விட கூடுதலாக 733 பேர் தேர்வெழுதி உள்ளனர்.

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்தேர்வின் தேர்ச்சி முடிவுகள் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பின்னர் தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com