சென்னை வந்தார் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
சென்னை,
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்ற பியூஷ் கோயல் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக தமிழ்நாடு பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன்ராம் மேக்வால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்தவுடன் பியூஸ் கோயல், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அப்போது அவர், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.மேலும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்கிறார்.






