சென்னை: இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
சென்னை:  இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
Published on

சென்னை

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.

பொது பட்ஜெட்

அதனை தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

இதன்படி, 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) சட்டசபை மீண்டும் கூடுகிறது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் பட்ஜெட் தாக்கல்

அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும். மொத்தத்தில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 1½ மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில், தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து விரிவான அளவில் ஆலோசனை நடைபெறும்.

தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது.

த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் கொடுக்கப்படும். திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்" என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

தங்க மோதிரம் திட்டம்

ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் இலவச மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்களின் ஆலோசனைகளும், கருத்து கேட்புகளும் நடைபெறும் என கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com