34 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதலீட்டு திட்டங்கள் மூலம் 93,935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
34 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் துறை ரீதியான அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ரூ. 52,257 கோடி மதிப்பில் 34 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 93,935 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாநில அரசின் அமைச்சரவை இன்று கூடி 34 முக்கிய முதலீட்டுத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கையான தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிடவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இன்றைய தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 34 திட்டங்களில் 52,257 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 93,935 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகும். மேற்படி முதலீடுகள் பெரும்பாலும், மின்னணுவியல், மின் வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, சூரிய சக்தி மின்கல உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அமைச்சரவையால் அனுமதி அளிக்கப்பட்ட சில முக்கிய முதலீடுகள் பற்றிய விவரங்கள் குறித்தும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com