

சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அவர் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற உரிமையில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் பிப்ரவரி மாதத்தில், ஆணையம் அமைத்து சமூக நீதிக் கணக்காய்வு நடத்தப்படும். சமூகநீதி விவரங்களுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தாழம்பூரில் 600 ஏக்கர் நிலங்களில் பட்டாக்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த நிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்.
பேராசிரியர் கலையரசனை காவல் துறையினர் அலைக்கழித்தது தவறானது. காவல் நிலையத்தில் பேராசிரியருக்கு நடந்த விஷயங்கள் தவறானது; நானும் அவரிடம் பேசினேன்.
தவறு செய்யும் திமுகவினரை கேள்வியே கேட்கக் கூடாதா? குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளில் சமரசம் செய்து, சான்றிதழ் வழங்கி ரூ.400 கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்ததற்காக அன்பில் மகேஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.