

சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், முதலில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தொடர் முயற்சியின் பலனாக, சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது. இதில், ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அறிவித்தன.
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்துள்ள நிலையில், த.வெ.க.வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இது, ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும். இதனால், த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சியமைக்க கவர்னர் அர்லேகரிடம் உரிமை கோரினார்.
இதனை தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் கடந்த 11-ந்தேதி பதவியேற்றனர். இதன்பின்னர், 13-ந்தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார். இந்த நிலையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியானது. இதற்காக தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் அர்லேகர் கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு நாளை வர இருக்கிறார்.
தேர்தலின்போது, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள், ஒரு மாநிலங்களவை பதவியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதில் ஒருவராக, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரான ராஜேஷ் குமார் இடம் பெறுவார். இதனால், 1967-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது.
இதேபோன்று, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.
அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும். கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார். அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.