தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவு - கருணாஸ் வரவேற்பு

23 ஆண்டுகள் போராடிய அரசுப் பணியாளார்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவு - கருணாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme TAPS) செயல்படுத்திட தமிழக முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ள இந்த ஆணை அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியின் மீது பெருநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பணியாளர்களின் 10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதும், 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்பதும் ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது மட்டுமல்ல அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டு அரசின் இதயத்துடிப்பாக இயங்குகிற அரசு பணியாளர்களுக்கு கட்டாயம் இந்த புதிய திட்டம் பயனாற்றும். அதுமட்டுமல்லாது ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதும் போராடிய அரசு அலுவலர்களின் கோரிக்கையை தாண்டிய முதல்-அமைச்சரின் அறிவிப்பாகும்!

2021-ஆம் ஆண்டு திராவிடமாடல் அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வழியாக அதை நிறைவேற்றியிருக்கிறார் முதல்-அமைச்சர்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய அரசின் வரிப்பகிர்வு, மத்திய அரசின் நிதி குறிப்பு உள்ளிட்ட சுமை இருந்தாலும் அதை தாண்டி, முதல்-அமைச்சர் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்றுவது வரவேற்கத்தக்கது.

23 ஆண்டுகள் போராடிய அரசுப் பணியாளார்களின் பெரும் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி பாராட்டி இச்செய்தியை மனதார வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com