உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

உலகத் திறன் போட்டிகளில், 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்று இந்தியா 10-வது இடத்தைப் பிடித்தது.
உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
Published on: 

சென்னை,

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்கிப் பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சீனாவின் ஷாங்காய் நகரில் 68 நாடுகள் பங்கேற்ற 48-வது உலகத் திறன் போட்டிகளில், 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medal for Excellence) வென்று இந்தியா 10-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 63 திறன் பிரிவுகளில் களம் கண்ட 70 நபர்கள் கொண்ட இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து 12 நபர்கள் பங்கேற்றனர். இவர்களில் 5 நபர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டிகளில் Dental Prosthetics பிரிவில் ஜா. முகமது சலாம், வெள்ளிப் பதக்கமும், Intelligent Security Technology பிரிவில் கா.பா. ராகுலும், Mobile Applications Development பிரிவில் சு.வி. அர்ஜுனும், Plastering and Drywall Systems பிரிவில் ம.சுரேந்திரனும், Jewellery பிரிவில் ஜாய் தாசும் சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medals for Excellence) வென்றுள்ளனர். இச்சாதனைகள், திறன் மேம்பாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் ஆற்றலை, சர்வதேசத் தரத்திற்கு இணையாக உயர்த்த அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகின்றன.

இந்த உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், வெள்ளிப் பதக்கம் வென்ற ஜா. முகமது சலாமுக்கு 15 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medals for Excellence) வென்ற கா.பா. ராகுல், சு.வி. அர்ஜுன், ம. சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகிய 4 நபர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்ற க.மீ. சுரேஷ் குமார், கி. கோகுலகண்ணன், பூ.ர. முகமது மபாஜ், சு.அஸ்வின், த. ரோஹித், தனுஸ்ரீ மகேஷ், ஆ. மோகன்ராஜ் ஆகிய 7 நபர்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை என மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வழங்கிப் பாராட்டினார்.

உலகத் திறன் போட்டிகளில், 64 திறன் பிரிவுகளில் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளவில் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், Hotel Management, மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் (Medical Allied Health) ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் (16 வயது முதல் 23 வயது வரை) பங்கேற்கலாம்.

உலகத் திறன் போட்டிகளில் பங்கேற்பதற்கு, முதலில் தமிழ்நாடு மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று, பின்னர் தென் மண்டல அளவிலான திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தேசிய அளவிலான திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களது மாணவ, மாணவியர்களிடையே இத்திறன் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் திறன் போட்டிகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி எண்கள் 9962220527 மற்றும் 9962220528 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டும், www.skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலமாகவும் அறியலாம்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் சோ. மதுமதி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com