

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒழுங்குமுறை பொது பங்குதாரர் வரம்புகளை பூர்த்தி செய்வதாக கூறி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் நிறுவனர்களின் பங்குகளை 75 சதவிகிதமாக குறைக்க மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை 27-ல் இருந்து 12 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கு கீழே கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியது இப்போது நடைமுறைக்கு வரப்போகிறது.
அன்னை இந்திரா காந்தி எடுத்த புரட்சிகர நடவடிக்கைகளினால் ஏழை, எளிய மக்கள் பெற்ற பயன்களை பறிக்கின்ற வகையில் பிரதமர் மோடி அரசின் நிதி ஆயோக் நிறுவனம் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கி ஊழியர் சங்கங்கள், எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் மோடி அரசு விரைவில் உரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.