தமிழ்நாடு நாள்: என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! - சீமான் வாழ்த்து

தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அனைத்து கடைகளிலும் வழங்குவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
Published on: 

சென்னை,

உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாள்

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்! ( நவம்பர் 01, 2026 | ஐப்பசி 15 )

உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!

உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.

இந்திய மத்திய அரசு 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம்தொடங்கி தெற்கெல்லை - வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு, தமிழகம், தமிழர் தேயம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.

சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்-அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார்.

தமிழ்நாடு தினம் மாற்றம்

ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய்நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக அரசு தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என நம்முடைய கடுமையான எதிர்ப்பினையும் மீறி வலிந்து திணித்தது. அதையே தற்போதையே தவெக அரசும் அப்படியே தொடர்வதுதான் பெருங்கொடுமை.

தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சிப் பெற்று, புரட்சிகர அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் ஏற்படும் நாளில் தமிழ்நாடு நாள் குழப்பநிலை துடைத்து எறியப்படும். உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய மத்திய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி, ஐப்பசி 15 (01.11.2026) ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியாகக் கொண்டாடவிருக்கின்றது.

ஆகவே, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’

அதோடு, நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன், “மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை”என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளைக் கடந்தும், அதைவிட மோசமான அவலநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்க்கு நிகழ்ந்துவரும் அப்பேரவலத்தை, பெருந்துயரைத் துடைத்து, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்கிட தமிழ்நாடு நாள் அன்று, என்னுடைய உயிருக்கினிய உறவுகள், அன்புத்தம்பி தங்கைகள், அருகில் உள்ள சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தாய்த்தமிழில் பெயர்பலகை வைக்க அன்புடன் கோரிக்கை வைப்போம்.

தமிழ்நாடு முழுவதிலும் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை, அறிவிப்பு பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவோம். அதனை நாம் பிறந்த பெருமைமிக்க தமிழ்ப்பேரினத்திற்கான இனமான கடமையாக எண்ணி தமிழ்நாடு நாளில் செயல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு,

உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com