

சென்னை,
தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 84.69 சதவீதம் என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்!" என்று தெரிவித்துள்ளார்.