தமிழ்நாடு மின்வாரியத்தின் நிலுவை கடன் ரூ.42,583 கோடி அதிகரிப்பு

2015 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிலுவை கடன் ரூ.42,583 கோடி அதிகரித்துள்ளதாக கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் நிலுவை கடன் ரூ.42,583 கோடி அதிகரிப்பு
Published on

சென்னை,

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவர் தயாரித்த, உதய்' திட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்திறன் அறிக்கை மற்றும் பொது நோக்கு நிலை அறிக்கை ஆகியவை தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை முதன்மை தலைமை கணக்காயர் ஆர்.அம்பலவாணன், விஸ்வநாத் சிங் ஜாடோன் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு தணிக்கை துறை அலுவலகத்தில் நேற்று மாலை வெளியிட்டனர்.

நிலுவை கடன் அதிகரிப்பு

2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவடைந்த ஆண்டுக்கான, உதய்' திட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 75 சதவீத கடனை எடுத்துக்கொள்ள வேண்டிய இலக்குக்கு மாறாக, 34.38 சதவீதத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இந்த பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ரூ.30,502 கோடி அளவுக்கு கடன் சுமையை தொடர்ந்தது. இதன் விளைவாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ரூ.9,150.60 கோடி கூடுதல் வட்டி சுமை ஏற்பட்டது.

தமிழக அரசின் பகுதி அளவு மட்டும் கடன் ஏற்பு, 25 சதவீத கடனை பத்திரங்களாக மாற்ற தவறியமை, மின் உற்பத்தி திட்டத்துக்கான மூலதன கடன் வகைகளில் 87.05 சதவீதம் உயர்வு, செயல்பாட்டு மூலதன கடன் வகைகளில் 189.88 சதவீத உயர்வு போன்ற காரணங்களால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிலுவை கடன்கள் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-2020 வரையிலான 5 ஆண்டு காலத்தில் ரூ.81,312 கோடியில் இருந்து ரூ.1,23,895.68 கோடியாக (ரூ.42,583.68 கோடி உயர்வு) அதிகரித்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரூ.503.28 கோடி அளவுக்கு காலங்கடந்த, அபராத வட்டியை செலுத்தியது.

அதிக விலைக்கு மின்சாரம்

2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க 200 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.99 என்ற அளவில் சமன்படுத்தப்பட்ட கட்டண விகிதத்தில் கொள்முதல் செய்ய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கயெழுத்திட்டது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற விகிதத்தில் புதுப்பிக்ககோரியது.

இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ரூ.149.02 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 என்பது ஏற்கனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் தற்போதைய சந்தை விலையான ஒரு யூனிட்டுக்கு ரூ.4.10 முதல் ரூ.5.48 வரையிலான விலையை விட குறைவாக இருந்தது. இந்த சூழ்நிலையில் அப்போது ஏற்புடையதாக, சரியான விலையாக இருந்த ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற விலையை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, விலையை குறைக்க அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததில் நிதி விவேகம் இல்லை. இருப்பினும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக விலையில் அதாவது ஒரு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.10 முதல் ரூ.5.48 வரை மின்சாரம் பரிமாற்ற சந்தை மூலம் மின்சாரம் வாங்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட குறைந்த விலை ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது நியாயமற்றது.

லாபம் ஈட்டிய 27 நிறுவனங்கள்

மாநில மின் பளு அனுப்பும் மையத்தால் மின் கொள்முதல் திட்டமிடுவதில் தகுதி அடிப்படையில் முன்னுரிமை என்ற கோட்பாட்டின் படி மின்சாரம் கொள்முதல் நடைமுறை சரிவர பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் ரூ.28.45 கோடி கூடுதல் செலவினமாக அமைந்துள்ளது.

62 அரசு நிறுவனங்கள், ஒரு சட்டமுறை கழகம் மற்றும் 9 அரசு கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் அடங்கிய 72 பொதுத்துறை நிறுவனங்களை மாநில பொதுத்துறை உள்ளடக்கியது. இதில், 27 அரசு நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் ரூ.1,205.56 கோடி லாபம் ஈட்டியுள்ளன. இதில், எரிசக்தி, தொழில்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட 5 அரசு நிறுவனங்கள் ரூ.1,011.95 கோடி பங்களித்துள்ளன. 31 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.18,629.83 கோடி இழப்பை சந்தித்துள்ளன. 2019-20-ம் ஆண்டில் 13 பொதுத்துறை நிறுவன சமூக பொறுப்புடைமை நடவடிக்கைகளுக்காக செய்த மொத்த செலவு ரூ.12.27 கோடி. அதிகபட்சமாக தொழில்துறை உள்பட 4 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.8.66 கோடி செலவழித்துள்ளன.

மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com