

சென்னை,
தமிழ்நாடு மின்சார வினியோக கழகம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 60 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று வாரிய அதிகாரிகள் கூறினர்.
அதிகரித்து வரும் நிதிச்சுமைகளால் தவித்து வரும் தமிழ்நாடு மின்சார வினியோகக் கழகம் (டி.என்.பி.டி.சி.எல்) நடப்பு 2025-2026 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 60 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய ரூ.2 ஆயிரத்து 73 கோடி லாபத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும்.
கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி, அதன் மொத்தக் கடன்கள் ரூ.1.07 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நிறுவனத்தின் 2025-2026-ம் ஆண்டுக்கான 17-வது ஆண்டு அறிக்கையின் படி, மொத்தக் கடன்கள் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 523 கோடியாக இருந்தது. இதில் ரூ.77 ஆயிரத்து 565 கோடி நீண்ட காலக் கடன்களாகும். இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்து 1,782 கோடியை விட அதிகமாகும்.
நிறுவனத்தின் நிதிச் செலவுகளும் 2024-2025 நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்து 517 கோடியில் இருந்து 2025-2026 நிதியாண்டில் ரூ.12 ஆயிரத்து 770 கோடியாக. 21.4 சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடன் சுமை இருப்பினும், லாபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம். நிறுவனத்தின் பெரும் கடன் சுமையைக் குறைக்க பெரிதாக உதவவில்லை. கோடைக்கால மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, டி.என்.பி.டி.சி.எல் பலமுனை கொள்முதல் நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 2024-2025-ம் ஆண்டில் ரூ.1,00.417 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.1,02,037 கோடியாக உள்ளது. இதில், வருமானத்தின் கிட்டத்தட்ட 32 சதவீதம் அரசாங்க உதவியில் (மானியங்கள் மற்றும் நிதியுதவிகள்) கிடைக்கிறது. மின்சாரக் கொள்முதல் மிகப்பெரிய செலவினமாகத் தொடர்ந்த போதிலும், அதன் செலவு ரூ.75 ஆயிரத்து 960 கோடியிலிருந்து ரூ.72 ஆயிரத்து 348 கோடியாகக் குறைந்தது.
ஊழியர் நலச் செலவுகள் ரூ.8 ஆயிரத்து 976 கோடியில் இருந்து ரூ.9 ஆயிரத்து 587 கோடியாக அதிகரித்த நிலையில், தேய்மானம் மற்றும் மதிப்பிழப்பு செலவுகள் ரூ.2 ஆயிரத்து 256 கோடியாக இருந்தன. நிதிச் செலவுகள் அதிகரித்த போதிலும், மின்சாரக் கொள்முதல் செலவுகள் ரூ.2 ஆயிரத்து 256 கோடியாக இருந்தன. நிதிச் செலவுகள் அதிகரித்த போதிலும், மின்சாரக் கொள்முதல் செலவினம் குறைக்கப்பட்டதால் நிறுவனத்தின் லாபத்தன்மை மேம்பட்டது.
மொத்தச் செலவுகள் ரூ.98 ஆயிரத்து 344 கோடியில் இருந்து ரூ.97 ஆயிரத்து 977 கோடியாகச் சிறிதளவு குறைந்தது. தமிழ்நாடு மின் வினியோக கழகத்தின் தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள முரண்பாடுகளால், அதன் நிகர லாபத்தில் ரூ.3,744,39 கோடி வரை குறைவதற்கோ அல்லது இழப்பு ஏற்படுவதற்கோ வாய்ப்புள்ளதாக தணிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தணிக்கையாளர்கள் கணக்குகளை ஆய்வு செய்தபோது, பயன்படுத்தப்படாத உதிரிபாகங்கள், நுகர்வோரிடம் இருந்து வர வேண்டிய நிலுவை தொகைக்கான இழப்பீட்டு நிதி ஒதுக்காதது. திட்டப்பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் இரட்டை வருவாய் வரவுகள் போன்ற பல்வேறு கணக்கியல் முரண்பாடுகளைக் கண்டறிந்தனர். இந்த முரண்பாடுகளைச் சரிசெய்யும்போது. தற்போதைய லாப மதிப்பில் இருந்து ரூ.3,744.39 கோடி குறையக்கூடும் எனத் தணிக்கையாளர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தணிக்கை முரண்பாடுகள் குறித்து மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் தணிக்கையாளர்களுடன் இணைந்து கணக்குகளைச் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. நிகர லாபம் இந்த அளவுக்கு பெருமளவில் குறையாமல் இருக்கத் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து வருகிறோம் என்று வாரிய அதிகாரிகள் கூறினர்.