சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

‘சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது’ என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சென்னையில் நடந்த விழாவில் பேசினார்.
சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
Published on

மனித உரிமைகள் செயல்பாடு

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நேற்று நடந்தது. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:-

தமிழகத்தில் மனித உரிமைகள் ஆணையம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 19, 20-ம் நூற்றாண்டுகளிலேயே கல்வி வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. இந்தியாவில் சமூக நீதியும் அப்போதே வந்துவிட்டது. பெண்கள் சுதந்திரம் என்பது அவர்களுக்கு தரும் கல்வியை பொறுத்துத்தான் அமையும். கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறார்கள். அதனால்தான் அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகம் பங்கேற்று வருகிறார்கள்.

வள்ளலாரால் சாத்தியமானது

சென்னை ஐகோர்ட்டில் 3-ல் ஒரு பங்கு பெண் நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் ஒதுக்கீடு மூலம் வரவில்லை. தங்களின் கல்வி மற்றும் திறமையால் வந்துள்ளனர். பின்தங்கியவர்களின் வளர்ச்சி தமிழகத்தைப் போல் மற்ற மாநிலங்களிலும் இருக்க வேண்டும். தமிழகம் சமூக நீதியில் சிறந்து விளங்குகிறது.

வள்ளலார், பெரியார் போன்றவர்களால் இது சாத்தியமானது. சட்டவிரோத கைது, லாக்கப் மரணங்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும். சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் நிலை வந்தால் ஒட்டுமொத்த பிரச்சினையும் தீர்ந்துவிடும். தமிழகத்தில் சமத்துவமும், சமூக நீதியும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com