முக்கிய திட்டங்களை தொடரும் தமிழக அரசு; உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு வைப்பு

முந்தைய அரசுகளின் முக்கிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் நேற்று தெரிவித்திருந்தார்.
முக்கிய திட்டங்களை தொடரும் தமிழக அரசு; உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு வைப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கின்றன.

இந்த திட்டங்களின் கீழ், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் தொடருமா? என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய், மக்களுக்கு பயனளிக்கும் முந்தைய அரசுகளின் முக்கிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.1000 உதவித்தொகை, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com