ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை கைவிட தமிழக அரசு முடிவு

மின் வாரியத்தில் முறைகேடு புகார்கள் எழுந்ததால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட பல்வேறு டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
ஸ்மார்ட் மீட்டர்
Published on

சென்னை,

தமிழகத்தில் மின் வாரிய பணியாளர்கள் நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சில பணியாளர்கள் நேரில் செல்லாமல் தோராயமாக கணக்கு எழுதுவதால் நுகர்வோர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

ஸ்மார்ட் மீட்டர்

இதற்கு தீர்வாக, மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு வசதி மூலம் தானாகவே மின் நுகர்வை கணக்கிட்டு, கட்டண விவரத்தை நுகர்வோரின் மொபைல் போனுக்கு அனுப்பும் 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை மின் வாரியம் கொண்டு வந்தது.

இதற்காக, 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி 93 மாதங்கள் பராமரிக்கும் வகையில், கடந்த 2025 மார்ச் மாதத்தில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில் உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. இதில் சுமார் 50 நிறுவனங்கள் பங்கேற்றன. தொழில்நுட்ப புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விலைப்புள்ளி திறக்க அரசு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

டெண்டர்கள் ரத்து

அதனைத் தொடர்ந்து மின் வாரியத்தில் முறைகேடு புகார்கள் எழுந்ததால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. புதிய அரசின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்கும் ஒரு பகுதியாக, தற்போதைக்கு இந்த 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை முழுமையாகக் கைவிட தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com