‘கள்’ தடையை நீக்க முடியாது என தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்: சீமான் கண்டனம்

தவெக அரசு கள்ளின் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
சீமான்
Published on

சென்னை,

கள்’ தடையை நீக்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

‘கள்’ தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்ததாகும். பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன்? தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பது தவெக அரசுக்கு தெரியுமா? தெரியாதா? ‘கள்’ போதைப்பொருள் என்றால், அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத்தீர்த்தமா? அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி, நம் நாட்டு ‘கள்’ அல்ல; மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் தவெக அரசு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா? அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத்தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா?

‘கள்’ உற்பத்தி

‘கள்’ உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையை கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தடைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது வெட்கக்கேடானது. உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையையும், தரத்தையும் ஒழுங்குபடுத்த முடிகிற அரசால், ‘கள்’ உற்பத்தியை மட்டும் உரிய உரிமம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டுவர முடியாதா? கலப்படம் நடைபெறுகிறது, சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது என்றால் அவற்றை அரசு தடுக்க வேண்டும். அதற்கு மாறாக, கள்ளுக்கு தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது கொடுங்கோன்மை இல்லையா? கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக அரசால் மலிவு விலையில் மதுவிற்க முடியுமென்றால், கலப்படக் கள்ளை தடுக்க, அரசால் தூய கள்ளை விற்க முடியாதா? கள்ளுக்குத் தடையை நீக்காமல், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று தவெக அரசு கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.

எதேச்சதிகாரத்தின் உச்சம்

பனை விவசாயிகள் பயன்பெறும் ‘கள்’ விற்பனைக்கு அரசு ஏன் செயல் திட்டம் வகுக்கக்கூடாது? என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையமும் தனது ஆய்வறிக்கையில், இயற்கை பானமான ‘கள்’ விற்பனையை அனுமதிக்கப் பரிந்துரைத்தது. நாம் தமிழர் கட்சியும், பனைதொழிலாளர்களும் ‘கள்’ தடையை நீக்கப் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, தவெக அரசு கள்ளின் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உடனடியாக திரும்பப்பெற்று, பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘கள்’ மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com