மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி நதிநீர் வல்லுனர்கள், சட்ட வல்லுனர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு
Published on

சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீரை நம்பி இருக்கும் தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனை காத்திடவும் முதல்-அமைச்சர் விஜய், காவிரி நதிநீர் வல்லுனர்கள், சட்ட வல்லுனர்களுடன் தலைமைச்செயலகத்தில் கடந்த 25-ந்தேதி ஆலோசனை மேற்கொண்டார். தீர்ப்பு விவரங்களை கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்கு பின்னர், உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அரசு தலைமை வக்கீல் விஜய் நாராய ணன், மூத்த வக்கீல் ஜி.உமாபதி, காவிரி தொழில் நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் ஆர்.சுப்பிரம ணியன் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்ற முதல் அமைச்சர், மேகதாது விவகாரத்தில் உள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து மூத்த வக்கீல் ஜி.உமாபதியுடன் தமிழ் நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்ய இறுதி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் நியமனத்தில் முனைவர் பட்டம் பெற்ற ராம்சங்கரிடம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நேற்று மேகதாது விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். இதனால் அப்பகுதியில் உள்ள வனவிலங்கு கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேகதாது அணைக்கான உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக் கைகளையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசு, காவிரி நீர் வாரி நிகம் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச் சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com