

சென்னை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“டிசம்பர் 2025-ல், அப்போதைய திமுக ஆட்சியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' சமணத் துறவிகளால் விளக்கேற்றுவதற்காக நிறுவப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்தது. இது, அந்தத் தூண் ஒரு 'நில அளவைக் கல்' என்று முன்னதாக அரசு கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு முரணானதாகும்.
நேற்று, தற்போதைய அரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக, சுப்ரீம் கோர்ட்டில் இந்தத் தீபத்தூணை ஒரு 'நில அளவைக் கல்' என்று குறிப்பிட்டுள்ளது. ஒரே கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஒரு அரசு எவ்வாறு இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை தெரிவிக்க முடியும்?
இது, தமிழக அரசுக்கு (அன்று திமுகவாக இருந்தாலும் சரி, இன்று தற்போதைய அரசாக இருந்தாலும் சரி) இந்த விவகாரம் குறித்த புரிதலில் உள்ள தீவிரமான குறைபாடு அல்லது ஒட்டுமொத்த விஷயத்தையும் வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொண்டிருப்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.