தனியார் ஸ்டாப்அப் நிறுவனங்களில் தமிழக அரசு முதலீடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

டிட்கோ நிறுவனம் புதிய ஸ்டாப்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தனியார் ஸ்டாப்அப் நிறுவனங்களில் தமிழக அரசு முதலீடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தொழில்துறையில் தமிழகம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஸ்டாட்அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

2021-ம் ஆண்டில் 2,045 ஸ்டாட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அவை தற்போது 13 ஆயிரமாக வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தியாவில் அதிக ஸ்டாப்அப் நிறுவனங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஸ்டாப்அப் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது.

தற்போது, தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், புதிய ஸ்டாப்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது அரசு நிறுவனமான டிட்கோ பங்குரிமை அடிப்படையில் முதலீடு செய்துள்ளது. முதல் கட்டமாக 'அக்னி கூல்' ஸ்டாப்அப் மற்றும் 'ராப்டி' ஸ்டாப்அப் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அக்னி கூல் நிறுவனம் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ராப்டி நிறுவனம் டிசி மோட்டாரில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கிறது. இரு நிறுவனங்கள் மீதும் தலா ரூ.25 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. புராடக்ட் நேஷன் தமிழ்நாடு என்ற அடிப்படையில் இந்த பணிகளை முன்னெடுத்துள்ளோம். வேளாண் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டப்பட்பட்ட வேளாண் பொருட்கள், ஏ.ஐ. போன்ற ஸ்டாப்அப் நிறுவனங்களை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com