சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் அந்தஸ்து.. அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

184 ஆண்டுகள் பழமைவாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் படிக்கும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி
Published on

சென்னை,

சென்னையில் 184 ஆண்டுகள் பழமைவாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் படிக்கும் அந்தஸ்தை தமிழக அரசின் உயர் கல்வித்துறை வழங்கி உள்ளது.

இதனை வரவேற்று பச்சையப்பன் கல்லூரி முதல்வர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1842-ம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி பல தலைமுறைகளாக கல்வி சிறப்பு, சமூக பொறுப்பு மற்றும் கல்வி சேவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது கல்லூரி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு மாணவிகளுக்கும், இந்த நிறுவனத்தின் வாயில்களை திறந்து வைத்து, தரமான உயர்கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு பன்முகத்தன்மையும், உயிர்ப்பும் நிறைந்த கல்வி சுழலை உருவாக்கும். கல்லூரியின் பாரம்பரியத்தையும், பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே நவீன கல்வி மதிப்புகளுக்கு இந்த முயற்சி உறுதுணையாக அமைகிறது.

கல்லூரியின் கனவுகளை, எதிர்பார்ப்புகளை அங்கீகரித்து நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறைக்கு எங்கள் கல்லூரி தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com