

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னை பெரு மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் நகராட்சிப் பகுதிகளில் சொத்துவரியை கடுமையாக உயர்த்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாமன்றக் கூட்டங்கள் காலமுறைப்படி நடத்துவதற்கு நகராட்சித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் நிர்வாக உத்தரவு மூலம் சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படிதான் நடைபெறுகிறதா? என்கிற வினாவும் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் 6 சதவீதம் வரி உயர்வு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாது என்ற உறுதியான அரசியல் நிலை தொடர வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 601 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1201 சதுர அடி முதல் 1800 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1800 சதுர அடிக்கும் கூடுதலாக உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என சொத்துவரி உயர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள், அது தொடர்புடைய கட்டிடங்களுக்கும், காலி மனைகளுக்கும் தற்போதுள்ள அடிப்படை மதிப்பில் 100 சதவீதம் என சொத்து வரி உயர்த்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, சொத்துவரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என தடுத்து வைத்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்துறையின் சொத்துவரி உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வரி உயர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் சொத்துவரிகளை உயர்த்துவதை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.