மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு

விலையில்லா நவீன சைக்கிள் வழங்குவதற்காக 276.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு
Published on: 

சென்னை,

அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது.

ஹீரோ சைக்கிள்

தமிழநாடு அரசின் பட்ஜெட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஹெல்மட், குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை செயல்படுத்தும் வகையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்ட நிறுவனங்களுடன்- 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஹீரோ சைக்கிள் நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

தமிழக அரசு

இதில் மாணவர்களுக்கான சைக்கிளை 5,260 ரூபாய்க்கும், மாணவிகளுக்கான சைக்கிளை 5,130 ரூபாய்க்கும் வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதன் அடிப்படையில் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் விலையில்லா நவீன சைக்கிள் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

பேச்சுவார்த்தை

இதற்காக வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியின் அடிப்படையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மாணவர்களின் சைக்கிளுக்கு 7,235 ரூபாயும், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு 7,476 ரூபாயும் கோரியிருந்தது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளுக்கு முதலில் கோரிய 7,235 ரூபாயிலிருந்து, 1,975 ரூபாயை குறைத்து 5,260 ரூபாய்க்கும், மாணவிகளுக்கான சைக்கிளில் கோரிய 7,476 ரூபாயில் இருந்து, 2,346 ரூபாயை குறைத்து 5,130 ரூபாய்க்கும் வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முன்வந்தது.

தமிழக அரசு சார்பில் ஒப்பந்தபுள்ளி கோரிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட கொள்முதல் குழு 9 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான சைக்கிளை 5,260 ரூபாய்க்கும், மாணவிகளுக்கான சைக்கிளை 5,130 ரூபாய்க்கும் வழங்க முன்வந்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணையை வழங்க தமிழ்நாடு அரசு அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

X