நிரந்தர தீர்வு காண தமிழக அரசு தயாராக வேண்டும்: மத்திய இணை மந்திரி எல்.முருகன்

மழைக்காலங்களில் சென்னையின் இந்த நிலையை போக்க தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னையில் கூறினார்.
நிரந்தர தீர்வு காண தமிழக அரசு தயாராக வேண்டும்: மத்திய இணை மந்திரி எல்.முருகன்
Published on

மத்திய மந்திரி பார்வை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பார்வையிட்டார். அப்போது, அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, போரூர் மற்றும் தியாகராயநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை எல்.முருகன் வழங்கினார்.

தொலைநோக்குடன் தீர்வு

பின்னர் பட்டரவாக்கத்தில் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்-அமைச்சரை தொடர்புகொண்டு, வெள்ள நிவாரண பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என சமீபத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மத்திய அரசு தற்போது உதவி செய்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழகத்துக்கு செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

பல பத்தாண்டுகளாக மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதேபோன்றுதான் நீடித்து வருகிறது. அதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும்.

வடிகால் தூர்வார வேண்டும்

கடந்த 2015-ம் ஆண்டில் அவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டபோதிலும், தண்ணீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்ததால் அடுத்த 2 மாதத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில்கூட அதிகளவு தண்ணீர் வந்தும் அதைச் சேமித்துவைக்கவோ அல்லது பயன்படுத்தவோ நம்மிடம் எந்த திட்டமும் இல்லை. எனவே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும், அந்தத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும். பல இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. அந்த பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத்தால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளதால், இதுவரை பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்துகொள்ள வேண்டும். இயற்கை பேரிடரால் விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டே, பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமது கனவுத் திட்டமாக பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். அத்தகைய திட்டத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பா.ஜ.க. சென்னை கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com