போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மதுரையில் நடத்திய சோதனையில் 30 கிலோ எடையிலான போதைப் பொருள் ஒரே நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் எனும் தி.மு.க. முன்னாள் நிர்வாகி உட்பட பலர் தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக அரசின் அலட்சியப்போக்கால், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இனியாவது போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com