ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

கோப்புப்படம் 

ஆசிரியர்களின் கவலையைப் போக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை

நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

மாணவர்களுக்குள் அறிவையும், ஒழுக்கத்தையும் புகுத்தி அறிவுலகம் படைக்கும் உலகின் ஈடு இணையற்ற படைப்பாளிகளான ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள்தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள்தான். அதனால்தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அதுதான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் இன்று தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற கவலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதுதான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் கவலையைப் போக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்னொருபுறம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் கவலைகளைப் போக்கி, அவர்களின் பணிப்பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களால் மாணவர்கள், இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story