அரசு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

பொட்டலூரணி பகுதியில் மீன் கழிவு ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற அக்டோபர் 16-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உரிய முறையில் தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல், துப்புரவு பணி மற்றும் கட்டிடப் பணி போன்ற வேலைகளை அளித்து வருகின்றனர். எனவே இதை தடுப்பதற்காக தமிழக அரசு பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொட்டலூரணி பகுதியில் மீன் கழிவு ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற அக்டோபர் 16-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். உள்ளாட்சி நிர்வாகம் முழுவதும் ஊழல் ஆட்சி நிர்வாகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பு விசிய சம்பவம் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு சார்பில் தற்போது பேருந்து நிலையங்கள் அரசு கட்டிடங்கள் பாலங்கள் ஆகியவற்றிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. இது கடந்த 1997-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவிற்கு எதிரானது. எனவே அரசு கட்டிடங்களுக்கு கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு வைப்பதன் காரணமாக ஜாதி மத இன மோதல்கள் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது. சமூக வலைதளத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை போடுவது நியாயம் கிடையாது. ஆனால் தமிழக அரசு நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். அரசுக்கு சாதகமான கருத்துக்கள் போட்டால் பேசாமல் விட்டு விடுகிறார்கள். அரசுக்கு எதிராக கருத்துக்கள் போடுபவர்களை கைது செய்கிறார்கள்.
நாங்கள் நூற்றுக்கணக்கான புகார்கள் காவல்துறையிடம் கொடுத்தால், ஒரு வழக்கு கூட பதிவு செய்ய மறுக்கிறார்கள். ஆனால் வேறு ஏதும் என்றால் உடனடியாக கைது செய்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். போலியான அக்கவுண்டுகள் வைத்திருப்பவர்கள் தான் பிரச்சினை. எனவே தமிழக அரசு இந்த போலியான அக்கவுண்ட்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் கரூர் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பியதற்காக அரசு கேபிள் டிவியிலிருந்து அந்த தொலைக்காட்சியை நீக்கியது சரியல்ல. கருத்து மாறுபட்டு இருந்தால் சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்காக அரசு கேபிள் டிவியிலிருந்து விலக்குவது சரியானது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






