

சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்கள் ஒரு மாநிலத்தில் முதலீடு செய்ய முதன்மையாக எதிர்பார்ப்பது நிலையான ஆட்சியை தான். அப்போதுதான் அரசால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சலுகைகளும், கொள்கைகளும் நிரந்தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும். தவெகவுடன் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளும், இந்த அரசை தாங்கி பிடித்து கொண்டிருக்கின்ற கட்சிகளும் முதல்-அமைச்சருடைய செயல்பாடுகளை குற்றம்சாட்டி விமர்சிக்கின்றார்கள். இது ஒரு நிலையற்ற தன்மையை தமிழ்நாடு அரசுக்கு உருவாக்குகிறது.
கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கூட உலக முதலீட்டாளர்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்ததாக வரலாறு கிடையாது. இடதுசாரிகளுடைய ஆட்சி என்பதைவிட இடதுசாரிகள் ஆதரவால் நிற்கின்ற அரசு என்பது மிகவும் ஆபத்தானது. இடதுசாரிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகள் எப்போதுமே முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குகின்ற இயக்கங்களாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழலில் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவது என்பது சவால் ஆனது. தற்போது முதலீடு செய்திருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு உரிய நம்பிக்கை கொடுக்க தமிழ்நாடு அரசு முழு வேகத்தோடு முயற்சிக்க வேண்டும்.
முதலீடுகள் குறைந்தால் வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கும். வேலை வாய்ப்புகள் குறைந்து வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். தற்போது வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்ற நிலை மாறி தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லக்கூடிய நிலை உருவாகும். தமிழ்நாடு அரசு இதை எல்லாம் கவனத்தில் கொண்டு நிர்வாகத்தை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.