

சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழகத்தில் பல தசாப்தங்களாக பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான சட்ட சவாலை எதிர்கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக நீதி கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கையாண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை எவ்வித சமரசமுமின்றி பாதுகாக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது ஏதோ சாதாரணமாக வழங்கப்பட்ட சலுகை அல்ல. இது பல சமூக நீதிப் போராளிகளின் தொடர் போராட்டங்களினாலும், தமிழக மக்களின் நீண்டகால தியாகங்களினாலும் வென்றெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமிதம் மிக்க சமூக நீதி உரிமையாகும்.
1992-ல் சுப்ரீம் கோர்ட்டு 'இந்திரா சாஹ்னி' வழக்கில் 50% வரம்பு விதித்த போதிலும், தமிழகத்தின் தனித்துவமான சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அன்றைய தமிழக அரசு 1993-ல் தனிச் சட்டம் இயற்றி, இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இணைத்து பாதுகாப்பு பெற்றது. இந்த சட்டப் பாதுகாப்பிற்கு இப்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான அச்சுறுத்தலாகும்.
எனவே, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறவிருக்கும் இந்த மிக முக்கியமான வழக்கில், நாட்டின் மிகச் சிறந்த, மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு தமிழக அரசு தனது வாதங்களை மிக வலுவாக முன்வைக்க வேண்டும். 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தமிழகத்தில் உள்ள சமூக, பொருளாதாரப் பின்னடைவுகள் என்னென்ன என்பது குறித்த துல்லியமான, அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்களைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றைக் குரலில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும், வெறும் ஆலோசனைகளோடு நின்றுவிடாமல், களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும்.
இடஒதுக்கீட்டு வரம்பில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழகத்தின் அமைதிக்கும், சமத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் துளியும் வீரியம் குறையாமல் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.