சென்னையில் 13ம் தேதி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா


சென்னையில் 13ம் தேதி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
x

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவுக்கு சென்னையில் வருகிற 13ம் தேதி பொன்விழா ஆண்டு(50) பாராட்டு விழா நடைபெற உள்ளது.

சென்னை

முத்தமிழறிஞர் கலைஞரால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்ட இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

1975-ம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜா அவர்களின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல இசைஞானி இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக முதல்-அமைச்சரின் பாராட்டும், வாழ்த்தும்:

8.3.2025 அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில், 2.3.2025 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அதுகுறித்து சமூக வலைதளப்பதிவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் குறிப்பிடும்போது, "தம் கைப்பட எழுதிய Valiant Symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணி மகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா, தமிழக முதல்-அமைச்சரின் இல்லத்திற்கு வருகை தந்து, நன்றி தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த பாராட்டு விழா:

அதன் பின்னர் தமிழக முதல்-அமைச்சர், தம்முடைய வலைதளப்பதிவில், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.!" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி வரும் 13.9.2025, சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாவில், தமிழக துணை முதல-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசுகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் எம்.பி., சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி. ஏற்புரை நிகழ்த்த உள்ளார்.

இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூற உள்ளார்.

1 More update

Next Story