கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால்... தமிழக அரசு எச்சரிக்கை

கடைகளில் பிற மொழியில் மட்டும் பெயர்கள் இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால்... தமிழக அரசு எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு அபராதம் 50 ரூபாய் என இருந்த நிலையில் இப்போது ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கூறியதாவது:-

அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் பிற மொழியை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.எல்லா இடங்களிலும் தமிழ் பெயர் பலகைகள் வைக்கப்படுவதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இதன் காரணமாக வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.அதையும் மீறி பிற மொழியில் மட்டும் பெயர்கள் இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இப்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது." என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com