தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு-செலவு அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

பள்ளிக்கல்வி துறைக்கு 48,534 கோடி ரூபாயும், உயர்கல்வி துறைக்கு 8005 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு வரவேற்பிற்குரியது.

தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு-செலவு அறிக்கை:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு - செலவு அறிக்கை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய மிகப்பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை விட, நடப்பில் உள்ள நலத்திட்டங்களை தொடர்வது மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Also Read
வங்காளதேச புதிய அரசு பதவியேற்பு; டாக்கா சென்ற ஓம் பிர்லாவுக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு-செலவு அறிக்கை:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கிட உரிய திட்டங்கள் தீட்டப்படும் என்ற அறிவிப்பு, இன்றைய 4-வது தொழில் நுட்ப புரட்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் சரியான முன்னெடுப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்விலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்பிற்குரியது.

உற்பத்தி, சேவை துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை வளர்ச்சிக்கு ஆதாரம் என சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு 48,534 கோடி ரூபாயும், உயர்கல்வி துறைக்கு 8005 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு வரவேற்பிற்குரியது. எனினும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரித்திட வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில், தொழிற்கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 54,301 மாணவர்கள் பயன் பெற்றிருப்பதும், அவர்களுக்கான கல்வி மற்றும் உணவு கட்டணங்களுக்காக இதுவரை 1,512 கோடி ரூபாயை மாநில அரசு செலவிட்டுள்ளதும் வரவேற்பிற்குரியது. மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்யாமல் வஞ்சித்த போதிலும், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, சாலை, பாலம், நகர்ப்புற வசதிகள் மேம்பாட்டுக்கு அதிக நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மிஜி பூங்கா/தொழிற்பூங்கா விரிவாக்கம் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கம் வரவு - செலவு அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் கூடுதலாக அதிகரித்திருக்க வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம் தற்காலிகம், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற அறிவிப்புகள் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. குளிர்சாதன கிடங்குகள், விதை வங்கி, விவசாய இயந்திர உதவி திட்டங்கள், பாசன திட்டங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 70 விழுக்காடு மானியம் வழங்கல், வேளாண்மை துறைக்கு ரூபாய் 47,248 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்பிற்குரியன.

நாகை, சிவகங்கை மற்றும் கரூரில் வேளாண்மை கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்ட கலைக்கல்லூரி என்ற அறிவிப்பு வரவேற்பிற்குரியது. நிதி ஒதுக்கீடுகள் செய்வதில் மத்திய அரசு தமிழ்நாட்டை கடுமையாக புறக்கணிக்கும் நிலையில், கடும் நிதி சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு - செலவு அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com