தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - அரசாணை வெளியீடு


தினத்தந்தி 10 Jan 2026 3:36 PM IST (Updated: 10 Jan 2026 3:54 PM IST)
t-max-icont-min-icon

ஜனவரி 1 முதல் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வந்தனர். இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.

இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது. அதன்படி, ஜனவரி 2ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஜனவரி 3. தேதி ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இதன்படி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார்

11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story