கி. வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்...!

2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கி. வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்...!
Published on

சென்னை,

"தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருதை ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூக பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூக பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிக சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளை பரப்பி பன்னாட்டு தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியை தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழக தலைவருமான முனைவர் கி. வீரமணிக்கு 2023-ம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வு குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

"தகைசால் தமிழர்" விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் கி. வீரமணிக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும், வருகிற 2023-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com