

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து வல்லநாடு பகுதியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகம் போதை பொருள்களின் சந்தையாக மாறிவிட்டது. ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என தி.மு.க. பகல் கனவு காண்கிறது.
இந்த பகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும், செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி மற்றும் கலைக் கல்லூரி அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் உடனடியாக மூடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம்: தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த டி.டி.வி. தினகரன், "2021-ல் நாங்கள் பிரிந்து இருந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. இப்போது கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் விரோத தி.மு.க.வை வீழ்த்த இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும்" என்று பேசினார். மேலும் அவர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 25,000 ஏக்கரில் நடைபெறும் வாழை சாகுபடியை கருத்தில் கொண்டு, வாழை சார்ந்த பிரத்யேக சந்தை அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அ.ம.மு.க. மாவட்ட நிர்வாகிகள் சங்கரலிங்கம், சிவராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.