‘அமைதி - நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது’ கவர்னர் பெருமிதம்

‘அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் நாட்டிலேயே சிறந்த 10 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. அரசியலமைப்பு வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது’, என்று கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.
‘அமைதி - நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது’ கவர்னர் பெருமிதம்
Published on

சென்னை,

தமிழகத்துக்கு ஆய்வு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பாடப்பிரிவு உறுப்பினர்களான ஆயுதப்படையின் 15 அதிகாரிகள், குடிமைப் பணியைச் சார்ந்த 2 அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, ஈரான், நேபாளம், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவினர், சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

தமிழகம் குறித்து பெருமிதம்

மொழி, இலக்கியம், வரலாறு, கலாசார மற்றும் ஆன்மிக செழுமையை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையின் தெளிவான தன்மையை தமிழகம் பிரதிபலிக்கிறது.

சுதந்திரத்துக்கு பிறகு, இந்தியாவின் அரசியலமைப்பு வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் தமிழ்நாடு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மனித மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், தொழில்கள், விவசாயம், எரிசக்தி துறை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கிராமப்புற மேம்பாடு, சமூக மேம்பாடு போன்றவற்றை மக்களிடையே எடுத்து சென்று அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் நாட்டிலேயே சிறந்த 10 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.

சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 56 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு மனித வளத்தை தன்னகத்தே தமிழ்நாடு கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவும் மத்திய அரசு திட்டத்தின் முழுப் பயனையும் இந்த மாநிலம் பெற்றுள்ளது.

உலகளவில் 3-வது இடம்

பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், ஜன்தன் யோஜ்னா (பிரதமர் மக்கள் நிதி திட்டம்), நேரடிப் பலன் பரிமாற்றம், ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு திட்டம்), ஜனுஷதி பரியோஜனா (பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம்), திறந்தவெளியில் மலம் கழித்தலின்மை, சமத்துவமின்மை நீக்குதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் குழந்தைப் பாதுகாப்பு, முத்தலாக்' திட்ட அமலாக்கம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள், உணவு, தங்குமிடம், சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை மனித நேயத்துடனும் பாதுகாப்புடனும் பெறுவதை உறுதி செய்கிறது.

இந்தியா 2021-ம் ஆண்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களைக் (புதுநிறுவனங்களை இயக்கமூட்டுதல்) கண்டுள்ளது. 2014-ம் ஆண்டில் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூட இல்லை என்ற நிலை மாறி தற்போது உலகளவில் நமது நாடு 3-வது இடத்தில் உள்ளது.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டில், மத்திய அமைச்சரவை இணைச் செயலாளர் தீரஜ் முகியா, மாநில அதிகாரிகள், கவானர் மாளிகை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com